‘சூது கவ்வும் 2′ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
சூது கவ்வும் 2’ திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, கருணாகரன், எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
படத்தின் தயாரிப்பாளர் சி. வி. குமார் பேசுகையில், ”சூது கவ்வும் படத்தின் முதல் பாகத்தை எடுக்கும் போதே சூது கவ்வும் 2 ஐடியா இருந்தது. நலன் குமாரசுவாமியிடம் இது தொடர்பாக பேசும் போது ஒரு கட்டத்தில் ‘சூது கவ்வும் 2 ‘ படத்திற்கான கதையை எழுத முடியவில்லை என்றும், சில ஆண்டுகள் கழித்து இதை மீண்டும் உருவாக்கலாம் என்றும் சொன்னார். அதற்குமேல் அவரும் பிஸியாகி விட்டார்.
சூது கவ்வும் 2 படத்தின் திரைக்கதையை யாரால் சரியாக எழுத முடியும் என்று நினைத்தபோது அர்ஜுன் வந்தார். அப்போது அவர் ‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’, மற்றும் ‘ராட்சசன்’ படத்தின் திரைக்கதையில் பங்களிப்பு செய்திருந்தார். அதன் பிறகு ஒரு குழுவை உருவாக்கி 2019ம் ஆண்டில் இப்படத்தின் திரைக்கதையை எழுதத் தொடங்கினோம். சூது கவ்வும் படத்தின் முதல் பாகத்தில் இருக்கும் கதாபாத்திரங்கள் தான் இந்த இரண்டாம் பாகத்திலும் இருக்கிறார்கள்.
பிறகு ஒருநாள், 2013ம் ஆண்டில் சூது கவ்வும் படத்தின் முதல் பாகத்தை எடுத்தோம். ‘சூது கவ்வும் 2’ திரைப்படம் 1990களில் தொடங்கி 2013 கடந்து 2024 ஆண்டில் எப்படி இந்த கதை தொடர்கிறது என்று நலன் குமாரசாமி ஐடியா மட்டும் கொடுத்தார். அத்துடன் நலன் குமாரசாமி ‘சூதுகவ்வும்- தர்மம் வெல்லும்’ என்ற பெயரில் சூது கவ்வும் படத்தின் மூன்றாம் பாகத்தை எடுப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தால் தான் சூது கவ்வும் 2 படத்திற்கான அனுமதியை வழங்குவேன் என்றார். எனக்கு அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறிவிட்டேன்.
நலன் குமாரசாமி – ‘சூதுகவ்வும் -தர்மம் வெல்லும்’ என்பது வரை இப்படத்தின் கதையை எழுதி இருக்கிறார். தமிழ் சினிமாவில் தற்போது பார்ட் 1 பார்ட் 2 பார்ட் 3 என பல படங்கள் வந்திருக்கிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் இந்தத் திரைப்படம் தான் முதல் ‘ட்ரையாலஜி’ யாக இருக்கும் என்று பெருமை கொள்கிறேன் என்றார்.
நீண்ட நாட்கள் கழித்து என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் உருவான இந்தத் திரைப்படம் என்னுடைய நிறுவனத்தில் இருந்து வெளியாகும் 21வது திரைப்படம். 20 திரைப்படங்களுக்கு வழங்கிய ஆதரவை இப்படத்திலும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
நடிகர் எம். எஸ். பாஸ்கர் பேசுகையில், ”இந்தப் படத்தில் எனக்கு சந்தோஷமான விசயம் ஒன்றும், மறக்க முடியாத விஷயம் ஒன்றும் நடந்தது. சூது கவ்வும் படத்தின் முதல் பாகத்தில் கருணாகரனின் அப்பாவாக நடித்தேன். அந்த கதாபாத்திரத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதேபோல் இந்த படத்திலும் வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். வாகை சந்திரசேகருடன் 40 ஆண்டுகால நட்பு இருந்தாலும் இந்த படத்தில் தான் அவருடன் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கிறேன்.
டிசம்பர் 28ம் தேதி படப்பிடிப்பில் இருந்தபோது நானும், வாகை சந்திரசேகரும் உணவு அருந்த தயாராகி கொண்டிருந்த போதுதான் கேப்டன் விஜயகாந்த்தின் மறைவு செய்தி கிடைத்தது. அதன் பிறகு நாங்கள் சாப்பிடவே இல்லை. மனசு சரியில்லை. கட்டுப்பாட்டை மீறி அழ தொடங்கினேன். நான் ஒருபுறம் அழுது கொண்டிருக்கிறேன். மறுபுறம் மாமா வாகை சந்திரசேகர் அழுது கொண்டிருக்கிறார். தவிர்க்க முடியாத காரணத்தினால் அடுத்த நாள் டிசம்பர் 29ம் தேதி அன்று கேப்டனின் இறுதி சடங்கில் கலந்து கொண்டோம். எத்தனையோ நபர்களை வாழவைத்த கேப்டன் விஜயகாந்தின் ஆசி இப்படத்தின் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நிச்சயம் உண்டு. இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று அவரது ஆன்மாவிடம் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
நடிகர் மிர்ச்சி சிவா பேசுகையில், ”எங்கே இருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. பாய்ஸ் ஹாஸ்டலில் இருப்பது போல் இருக்கிறது. அதற்காக படத்தின் ஹீரோயின் இல்லை என்று நினைக்காதீர்கள். ஹீரோயின் கதாபாத்திரம் கற்பனையான கதாபாத்திரம். அதனால் இங்கும் ஹீரோயின் இருக்கிறார்கள் ஆனால் எங்கே என்று தான் தெரியவில்லை.
சி வி குமார் சாரை அலுவலகத்தில் சந்தித்தபோது ‘சூது கவ்வும் 2’ படத்தை உருவாக்கவிருக்கிறோம் என்றார். அதை சொன்னவுடன் எனக்குள் சூது கவ்வும் நல்ல படமாச்சே, அதை ஏன் இரண்டாம் பாகம் எடுக்கிறார்கள் என்று தோன்றியது. அதாவது அந்த நல்ல படத்தை ஏன் மீண்டும் எடுக்கிறார்கள் என்பது தான் என்னுடைய கேள்வியாக இருந்தது.
அதில் நான் நடிக்கிறேன் என்றாலும் அப்போது இயக்குநர் அர்ஜுன் இந்த திரைப்படம் சூது கவ்வும் திரைப்படத்தின் ப்ரீகுவலாக உருவாகிறது. அதன் பிறகு தற்போதைய படத்துடன் தொடர்பு ஏற்படும் என்றார். அத்துடன் அதற்காக அவர் சொன்ன திரைக்கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த கதைக்குள் நான் வருவது, கருணாகரனை சந்திப்பது, என பல சுவாரசியமான திருப்பங்கள் இருந்தன. அதன் பிறகு இப்படத்தின் பணிகளை தொடங்கினோம்.
‘சூது கவ்வும் – தர்மம் வெல்லும்’ என்று அடுத்த படத்தை தயாரிக்க உள்ளதாக சொன்னார். ஆனால் அந்த படத்தில் நான் இருக்கிறேனா? இல்லையா? என்று சொல்லவில்லை. இருந்தாலும் அந்தப் படமும் வெற்றி பெற வாழ்த்து தெரிவிக்கிறேன்.
கருணாகரன் கொடுத்த பில்டப் சற்று அதிகம். என்னுடைய பேச்சை கேட்பதற்காக பாண்டிச்சேரியில் இருந்து வந்திருக்கிறேன் என்றார். அவர் பாண்டிச்சேரியில் எப்படி இருந்தார் என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும் அவரும் ஒரு திறமையான நடிகர். அவருடைய முதல் படம் கலகலப்பு. அதில் நானும் அவருடன் இணைந்து நடித்தேன். படப்பிடிப்பு தளத்தில் சந்திக்கும் போது நாமெல்லாம் எப்போதும் பரபரப்பாக இருக்க வேண்டும் என சொல்வார்.
அந்தப் படப்பிடிப்பு தளத்தில் நான்- கருணாகரன் -யோகி பாபு ஆகிய மூவரும் ஒன்றாக தான் இருப்போம். இன்று யோகி பாபு நடித்த படத்தை அவரே திரையரங்கத்திற்கு சென்று பார்க்க முடியாத அளவிற்கு பிஸியாக இருக்கிறார். அதைவிட சந்தோஷம் கருணாகரன் நூறு படங்களில் நடித்திருக்கிறார் என்று அவர் சொன்னது. அவர் இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
அர்ஜுன் பேசும்போது 15 சவரன் தங்க நகையை தொலைத்து விட்டதாக குறிப்பிட்டார். அது ஏன் இங்கு சொன்னார் என்றால்.. இந்த படம் வெற்றி பெற்றால்.. படத்தின் தயாரிப்பாளர் அந்த 15 சவரன் தங்க நகை பரிசாக வழங்க வேண்டும் என்பதற்காக சொன்னார். அதனால் இந்த படம் வெற்றி பெற்ற பிறகு அவருக்கு மறக்காமல் 15 சவரன் தங்க நகையை தயாரிப்பாளர்கள் பரிசாக வழங்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
சூது கவ்வும் முதல் பாகம் கல்ட் பிலிம். சூது கவ்வும் இரண்டாம் பாகம் ஃபன் பிலிம்.. இந்தத் திரைப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ரசிக்கலாம். டிசம்பர் 13ம் தேதி அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.



