ஈரோடு மாவட்டம் பவானியில் புகழ்பெற்ற கூடுதுறையில் அமைந்துள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் ஆடி18 முன்னிட்டு பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர். பவானி கூடுதுறையில் பவானி ஆறும், காவிரி ஆறும் சங்கமிக்கின்ற இடத்தில் சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு 73.35 அடியாக இருக்கிறது. ஆடி18 அன்று காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடும். ஆனால் இந்த வருடம் மழை பொய்த்து விட்ட காரணத்தினால் வெள்ளம் கரைபுரண்டு ஓடவில்லை. இருந்தாலும் மேட்டூர் அணையில் இருந்து ஓரளவிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கூடுதுறையில் ஆண்களும், பெண்களும் புனித நீராடினார்கள்.

இங்கு ஆண்களுக்கு தனியிடமும், பெண்களுக்கு தனி இடமும் அமைக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பாக இருப்பது குறித்து காவலர்கள் அடிக்கடி பக்தர்களுக்கு அறிவுரை வழங்கி வந்தனர். கூடுதுறையில் உள்ள மண்டபத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர். கூடுதுறைக்கு அதிகாலையில் இருந்தே பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். புது மணப்பெண் தம்பதியர்கள் தங்களது தாலிகளை மாற்றிக் கொள்கின்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது. எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் மிகச் சிறப்பாக செயல்பட்டனர்.