புகழ்பெற்ற இசைக்கலைஞர் ஏஆர் ரஹ்மானை தன்னுடன் இணைத்து வந்த வதந்திகள் குறித்து பேஸிஸ்ட் மோகினி டே இறுதியாக தனது மௌனத்தை உடைத்தார். அவர் வதந்திகளை மறுத்து இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். ஏஆர் ரஹ்மானை தந்தையின் உருவம் என்றும் அழைத்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தான் அமெரிக்கா செல்லும் வரை ஏஆர் ரஹ்மானுடன் 8.5 ஆண்டுகள் பேஸிஸ்டாக பணியாற்றியுள்ளதாக மோகினி டே கூறியுள்ளார். அவர் பல ஆண்டுகளாக அமெரிக்காவில் இருக்கும் பல பாப் கலைஞர்களுடன் தொடர்பு கொண்டுள்ளார். தன் கணவரான மார்க்கை பரஸ்பர ஒப்புதலுடன் பிரிவதாக அவர் சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார். அதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும்போதே, இது தங்களின் தனிப்பட்ட விஷயம் என்பதால் அனைவரும் அதை மதித்து அன்பாக இருக்க வேண்டும் என்றும் மோகினி கேட்டுக் கொண்டார்.
மோகினி தனது சுற்றுப்பயணத்தை முடித்த பிறகு இந்த வதந்திகளுக்கு தீர்வு காண்பதற்கான நேரம் கிடைத்திருப்பதாக கூறினார். அந்த வீடியோவில், ரஹ்மான் தனது தந்தையை விட இளையவர் என்றும், தனக்கும் ரஹ்மானின் மகள்களுக்கும் ஒரே வயது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மோகினி டே தன்னுடைய இன்ஸ்ட்டாகிராம் பதிவில், “எனக்கும் ஏஆர் ரஹ்மானுக்கும் எதிரான தவறான தகவல்கள் மற்றும் அடிப்படையற்ற அனுமானங்கள்/கூற்றுக்கள் ஆகியவற்றைப் பார்ப்பது முற்றிலும் நம்பமுடியாதது. கிட்டத்தட்ட 8.5 வருடங்கள், ஏஆர் ரஹ்மான் அவர்களுடன் இணைந்து பணிபுரிந்த திரைப்படங்கள், குழுவாக சென்ற சுற்றுப்பயணங்கள் என அனைத்திலும், அவருடன் இணைந்து பணியாற்ற கிடைத்த நேரத்தை நான் மதிக்கிறேன். சக மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கை சம்மந்தப்பட்ட உணர்ச்சிகரமான விஷயங்களில் மக்களுக்கு மரியாதையோ, அனுதாபமோ, பச்சாதாபமோ சிறிதும் இல்லை என்பதைக் கண்டு மிகுந்த மனவருத்தம் ஏற்படுகிறது. இப்படியான சில மக்களின் மனநிலையைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. மேலும், சில ஊடகங்கள் இந்த இரண்டு நிகழ்வுகளையும் ஒன்றிணைத்துப் பேசி கொச்சைப்படுத்துவது குற்றச் செயல். இது மிகுந்த மனவேதனை அளிக்கிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.
மோகினி டே பின்னணியின் சுருக்கம் :
மோகினி டே பிறந்து வளர்ந்தது எல்லாம் இந்தியாவின் மும்பை மாநகரில் தான். மும்பையில் கடந்த ஜூலை 20 1996 ஆம் ஆண்டு வங்க மொழி பேசும் தம்பதிக்கு மகளாய் பிறந்தார்.
இவரது தந்தை சுஜோய் டே; அன்றைய காலகட்டத்தில் மும்பை, கொல்கத்தாவில் பிரபலமான இசைக்கலைஞர் ஆவார். மோகினியின் இசை ஆர்வத்திற்கு அவரது தந்தையும் ஒரு முக்கிய காரணம் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மூன்றாவது வயது முதலில் இசைக்கருவிகளின் மீது அதீத ஈடுபாட்டை காண்பித்த மோகினியின் உணர்வுகளை புரிந்துகொண்ட அவரது தந்தை அவருக்கு இசை குருவாக மாறியதோடு அவரது ஒன்பதாவது வயதில் இசைப் பயிற்சியில் சேர்த்தார்.
Bass Guitar-ஐ தனது இசைப் பயணத்திற்கான கருவியாக தேர்வு செய்த மோகினி டே, தனது 11 வயதில் முதன்முறையாக மேடையேறினார். தொடர்ந்து தனது தந்தையின் நண்பர் ரஞ்சித் உதவியுடன் உலகளாவிய இசைப் பயணங்களை மேற்கொண்டார்.
ஒரு பேஸ் கிட்டாரிஸ்ட்டாக உருவாகிய மோகினி டே, உலக அளவில் நடைபெற்ற 40-க்கும் அதிகமான இசை நிகழ்ச்சிகளில் பேசிசிட் ஆக ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றியுள்ளார். இதன் மூலம் அவருக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்தது. 2023-ல் தனி ஆல்பத்தை அவர் வெளியிட்டார். இசையமைப்பாளர், பாடகர் என பல்வேறு முகங்களைக் கொண்டவர் மோஹினி என்பது குறிப்பிடத்தக்கது.