டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களுக்கு ரசீது வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்தவர் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘கொளத்தூர், மாதவரம் உட்பட 30 இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்த ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், கடந்த 2022ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரை கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை சம்பந்தப்பட்ட ஊழியரிடம் இருந்து வசூலித்து அரசுக்கு செலுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட ஊழலுக்கு எதிராக அரசு பணிநீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று (05-08-26) விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் நிறுவனம் தரப்பில், மனுதாரர் சுட்டிக்காட்டிய அந்த 5 கடைகள் மூடப்பட்டுவிட்டது என்று குறிப்பிட்டு மீதமுள்ள கடைகளுக்கான இருப்பு மற்றும் விற்பனை பதிவேடு குறித்து கடைவாரியாக அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி இளந்திரையன், ‘டாஸ்மாக் கடைகளில் ரசீது புத்தகங்கள் பராமரிக்கப்படவில்லை. டாஸ்மாக் கடைகளில் ரசீதுகளும் வழங்கப்படவில்லை. எனவே தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரசீது புத்தகங்களை பராமரிக்க வேண்டும். மேலும் நுகர்வோர் வாங்கும் ஒவ்வொரு மதுபான பாட்டிலுக்கும் ரசீது கொடுக்க வேண்டும்’ என்று டாஸ்மாக் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த உத்தரவை அமல்படுத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய டாஸ்மாக் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Comments (0)
Add Comment