சில தினங்களுக்கு முன் நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய நீண்டநாள் காதலரான ஆண்டனி தட்டிலை வரும் டிசெம்பர் மாதம் திருமணம் செய்யப்போவதாக அறிவித்திருந்தார். இவர்களது திருமண முன் விழாக்கள் கோவாவில் பிரம்மாண்டமான முறையில் நடக்க இருப்பதாகவும், திருமண நிகழ்வு கேரளாவிலும் நடக்கவிருப்பதாகவும் தகவல்கள் உள்ளது.
சினிமா பின்னணி உள்ள குடும்பத்தில் இருந்து வந்த கீர்த்தி சுரேஷ், விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்த ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர். அதன் பிறகு நடித்த ‘ரஜினிமுருகன்’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பரிட்சையமான நடிகையானார்.
அதன்பிறகு விஜய், ரஜினி, சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் பெரிய பட்ஜெட் படங்கள் பலவற்றில் நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்திருந்தார். 2018-இல் நாக் அஸ்வின் இயக்கத்தில் தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரான திரைப்படமான ‘நடிகையர் திலகம்’ படத்தில் தனியொரு நடிகையாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த திறமையான நடிகையாக அவர் வலம் வந்தார். அந்தப் படத்தில் அவர் மறைந்த பழம்பெரும் நடிகை ‘சாவித்ரி’-யின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கை முதன்மை மொழியாக கொண்டு வெளியான இந்த ‘மகாநடி’ திரைப்படத்திற்காக அவர் சிறந்த நடிகைக்கான பல விருதுகளை வென்றுள்ளார். 2019-இல் சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதையும் அவர் பெற்றார். சமீபத்தில் ‘ரகு தாத்தா’ என்ற படத்திலும் தனது துருதுருப்பான நடிப்பை வெளிப்படுத்தி பலரின் பாராட்டைப் பெற்றார். தற்போது இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஹிந்தி படம் ஒன்றில் வருண் தவானுடன் இணைந்து நடித்து வருகிறார்.
அவர் திருமணம் செய்யவிருக்கும் நபரான ஆண்டனி தட்டில் என்பவர் கொச்சி மற்றும் துபாயில் தொழிலதிபராக இருப்பவர். இருவரும் சிறுவயதில் இருந்தே ஒருவருக்கு ஒருவர் தெரிந்தவர்கள். கீர்த்தி சுரேஷூம் அவரது காதலரும் ஒன்றாக இணைந்து கேரளாவில் இளங்கலை படிப்பு படிக்கும்போதே இருவரும் காதல் வயப்பட்டுள்ளனர். அந்த புள்ளியிலிருந்து 15 ஆண்டுகள் வரை இருவரும் பரஸ்பர புரிதலுடன் தங்களது காதலை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.
இத்தனை ஆண்டுகள் ரகசியமாக வைத்திருந்த தனது காதலை சில தினங்களுக்கு முன்தான் ஊடக்கத்திற்கு வெளிப்படுத்தினார். முன்னணி நடிகைகள் பலர் சமீப காலமாக திருமண செய்தியை வெளியிட்டு திருமணமும் செய்துவரும் நிலையில், கீர்த்தி சுரேஷூம் அந்த வரிசையில் இணைந்துள்ளார். இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
கீர்த்தி சுரேஷ் பற்றிய தவறான வதந்திகள் கடந்த சில மாதங்களாக பரவி வந்த நிலையில் அவரது இந்த திருமண அறிவிப்பு அந்த செய்திகளுக்கு பதிலடியாக இருக்கிறது.